பொன். வேதமூர்த்தி வழக்கு!
பிரதமர் அன்வார் பின்வாங்குகிறார்!
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தப் பதவியை வகிக்க அரசியல் சாசனப்படி தகுதி பெற்றுள்ளாரா என்பதை உறுதிசெய்ய மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தலைவர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்த வழக்கை பிரதமர் அன்வார் நேரில் எதிர்கொள்ளாமல் பின்வாங்குகிறார்.
இதன் வெளிப்படைத் தன்மையைத் தெரிந்துகொள்ள நாட்டு மக்கள் உரிமை பெற்றுள்ளனர். ஆனால், மலேசியர்கள் எழுப்பும் பல நியாயமான கேள்விகளை பிரதமர் அன்வார் ஏன் தவிர்க்கிறார் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன் வேதமூர்த்தி வினவியுள்ளார்.
தன்னுடைய வழக்கறிஞர் நிறுவனத்தின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ளாமல் அதை தள்ளுபடி செய்யும்படி பிரதமர் அன்வார் செய்துள்ள விண்ணப்பம், முக்கிய பிரச்சினையில் இருந்து நழுவப் பார்ப்பதுடன் இந்த வழக்கைத் தாமதப்படுத்தும் உத்தியாகவும் தெரிகிறது.
நீதியை நிலைநாட்டும் போர் மறவராக தன்னை எப்பொழுதும் காட்சிப் படுத்தும் பிரதமர் அன்வாரிடம் உண்மையும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்பும் இருந்தால் இந்த வழக்கை அவர் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும்; மாறாக, இப்படி, நீதிமன்ற நடைமுறைக்கும் நாட்டின் உயர் பதவிக்கும் பின்னால் ஒதுங்கக்கூடாது.
சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி, ஒன்றை தெளிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். “அரசியல் சாசன விதி 42-இன்படி அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டதில் தனக்கு முழு உடன்பாடு உள்ளது; அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதற்கு ஏதுவாக, அரசியல் சாசன விதி 48-இன்படி அன்வார் அரச அனுமதியைப் பெற்றாரா என்பதை அறிய நாட்டு மக்களைப்போல நானும் விரும்புகின்றேன்.
இது குறித்த உண்மையை அறியவும் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கவும் பிரதமர் அன்வாருக்கு எதிராக தான் தொடர்ந்துள்ள வழக்கு, சாரமில்லாதது, அற்பமானது, எரிச்சலூட்டக்கூடியது; நீதிமன்ற நடைமுறையை அத்து-மீறுவது என்றெல்லாம்கூறி பதுங்கவும் ஒதுங்கவும் முயற்சிப்பது பொருத்தமான நடவடிக்கை அல்ல;
தன்னுடைய வழக்கு அரசியல் சாசன விளக்கத்தைப் பற்றியதேத் தவிர அரசியலுக்கானது அல்ல என்பதை மாண்புக்குரிய நம் அரசியல் சாசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
24-11-2022இல் நாட்டின் 10-ஆவது பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்வாரின் நாடாளுமன்ற தகுதி நீக்கம் முறையாக அகற்றப்பட்டு இருந்ததா என்பதற்கு நேரடியான பதிலும் விளக்கமும் நாட்டு மக்களுக்குத் தேவை என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி விவரித்துள்ளார்.