அன்வாருக்கு எதிரான வழக்கு:
கூட்டரசு நீதிமன்றத்திற்கு மாற்ற பொன்.வேதமூர்த்தி பரிந்துரை
கோலாலம்பூர், அக்.08:
அன்வார் இப்ராகிம் வகிக்கும் பிரதமர் பதவி, சட்டபூர்வமானதா எனக் கேட்டு உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை, கூட்டரசு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி தன் வழக்கறிஞர் நிறுவனமான கார்த்திக் ஷான் மூலம் கடந்த 6-10-2025இல், மலாயா உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அன்வார் இப்ராகிம் நாட்டின் 10-ஆவது பிரதமராக தற்பொழுது வகிக்கும் பதவி, கூட்டரசு அரசியல் சாசனப் பிரிவு 128(2) மற்றும் 1964 நீதித்துறை சட்டப் பிரிவு 84 ஆகியவற்றின்படி சட்டப்படியானதா என கேள்வி எழுப்பி தொடரப்பட்டவழக்கு, அரசியல் சாசனம் சம்பந்தப்பட்டது என்பதால், கால விரயம் ஆவதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த வழக்கை கூட்டரசு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி உயர்நீதி மன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மூலவழக்கு, கூட்டரசு அரசியலமைப்பு சாசனப் பிரிவுகள் 42 மற்றும் 48 ஆகியவற்றின் தெளிவான விளக்கத்தைப் பற்றியது; குறிப்பாக, 48-ஆவது பிரிவு ஒருவரின் நாடாளுமன்ற உறுப்பிய தகுதி நீக்கத்தை அகற்றுவதைப் பற்றியது; 42-ஆவது பிரிவின்படி ஒருவர் அரச மன்னிப்பைப் பெற்றால், சம்பந்தப்பட்டவர்மீது விதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தகுதி நீக்கம் இயல்பாகவே அகன்றுவிடுமா என்பது உறுதிசெய்யப்படாத நிலையில், 2022 நவம்பர் 19, நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தலில் அன்வார் போட்டியிடத் தகுதி பெற்றிருக்கவில்லை என்று அன்வாருக்கு எதிரான வழக்கில் பொன்.வேதமூர்த்தி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அரசியல் சாசனத்தின் இறையாண்மையையும் சட்டத்தின் உறுதிப்பாட்டை-யும் நிலைநிறுத்துவதற்கு இந்தவழக்கில் கூட்டுரசு நீதிமன்றத்தின் அதிகாரப்படியான அறிவிப்பு அவசியமாகிறது.
இதன் தொடர்பில், நீதிமன்ற நடவடிக்கையில் தடை ஏற்படுத்தவோ தாமதப்படுத்தவோ அல்லது தந்திரமான நடைமுறை சிக்கலை ஏற்படுத்-தவோ கூடாதென்று அன்வாரைக் கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி, அன்வார் வகிக்கின்ற பிரதமர் பதவி தொடர்பில் அரசியல் சாசன ரீதியில் எழுந்துள்ள கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மலேசிய ஜனநாயகத்தின் ஆன்மா சம்பந்தப்பட்டு உள்ளதால் இந்த சிக்கல் விரைவாகவும் தீர்க்கமாகவும் மலேசிய மக்களுக்கு ஏற்புடையதாகவும் தீர்க்கப்பட வேண்டும். அரசுஇயஎந்திரத்திலும் அரசியல் சாசன மேலாண்மையிலும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் கூட்டரசு நீதிமன்றம் உரிய முடிவவை எடுக்க வேண்டும் என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.