கைமாறு கருதாத சேவையாளர்களை இந்திய சமூகம் வரும் பொதுத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும்!

16-ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், நம் அரசியல் உரிமைகளின் எதிர்காலத்தையும் நம் பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு நாம் விட்டுச்செல்ல விரும்பும் மரபையும் தீர்மானிக்க ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ளது என்பதை எச்சரித்துள்ளார் மலேசிய முன்னேற்றக் கட்சி எம்.ஏ.பி. தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி.

நம் சமூக மக்கள்தொகையும் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது, அதனுடன், நம் அரசியல் செல்வாக்கும் சுருங்கி வருகிறது.

பல தசாப்தங்களாக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஇகா, பிகேஆர் மற்றும் டிஏபி ஆகியவற்றின் தலைமை இந்திய மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது. 68 ஆண்டுகள் ஆனாலும் தாய்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் மஇகா-வால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை; நம் சமூகம் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிகேஆர் மற்றும் டிஏபியில் உள்ள இந்தியத் தலைமை மலாய் மற்றும் சீன நலன்களுக்கு அடிபணிந்து, இந்திய சமுதாயத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஏதும் செய்யவில்லை.

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆர்எம்கே-13 இல் மஇகா, பிகேஆர் மற்றும் ஜசெக இணைந்து ஒரு விரிவான திட்டத்திற்காக ஒற்றுமை அரசாங்கத்தை வலியுறுத்தத் தவறியுள்ளது, அன்வார் இப்ராகிம் முன்னெடுக்கும் பல இன அரசியலால் ஏமாற்றப்பட்ட-தோல்வியுற்ற இந்தியத் தலைமைக்கு தெளிவான சான்றாகும் என்பதை சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி அம்பலப்படுத்தி உள்ளார்.

ஒருபுறம், மஇகாவை தங்கள் கைப்பாவையாகப் பயன்படுத்தி தேசிய முன்னணி 68 ஆண்டுகளாக நம்மை தொடர்ந்து ஏமாற்றியதால், நம்பிக்கைக் கூட்டணியை நம்பினோம்; அவர்களும் இந்தியத் தலைவர்களை பொம்மைகளாக உருமாற்றி விட்டனர்.

மறுபுறம், பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள், இந்திய கூட்டாளி உறுப்பினர்களாக, பெரும்பாலும் கல்வியறிவு இல்லாத, இந்திய சமூக முன்னேற்றத்தில் நாட்டம் இல்லாத, புதிய வகை பொம்மைகளை முன்னிறுத்தி, இதுதான் மாற்றம் என காட்ட முற்படுகின்றனர்.

மலாய் மற்றும் சீன அரசியல்வாதிகள் நீண்ட காலமாக இந்தியர்களை முதிர்ச்சியற்றவர்களாகவும், எளிதில் கையாளக்கூடியவர்களாகவும் கருதுகின்-றனர். இதனால்தான் அவர்கள் பலவீனமான இந்தியத் தலைமையை ஊக்குவித்தும் வெற்று வாக்குறுதிகளை வாரி இறைத்தும் நம்மை தொடர்ந்து ஏமாற்றுகின்றனர்; பரிசுக்கூடைகளை வழங்குதல், அரசுசாரா நிறுவனங்-களுக்கு நன்கொடை அளித்தல்; இந்து கோயில்களுக்கு நிதியளித்தல் போன்றவற்றால் நம் பிரச்சினைகள் ஒருகாலும் தீராது.

எனவே, நமக்கு ஒரு விரிவான அரசியல் தீர்வு தேவை. இதற்கு ஹிண்ட்ராஃப் மற்றும் எம்.ஏ.பி. கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள், இதுவரை மற்றவர்களை நம்பி முயற்சி செய்து எந்த பலனும் இல்லை. ஆனால், தானும் தன் குழுவினரும் நிரூபிக்கப்பட்ட பதிவுகளைக் கொண்டிருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு சரித்திர சாதனை நிகழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொள்கைக்குக் கட்டுப்பட்டு, இந்திய சமூகத்தின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காகப் போராடுவதில் நிரூபிக்கப்பட்ட பதிவுகளைக் கொண்ட தலைவர்கள்மீது சமுதாயம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

ஹிண்ட்ராஃப் இயக்கமும் எம்.ஏ.பி. கட்சியும் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்காக குரல்கொடுக்கும் அதேவேளை, நீதிக்காகவும் சகமனிதர்களின் சகவாழ்விற்காகவும் பாடுபடுகின்றனர்.

நம் சமுதாயம் மெத்தனப் போக்கிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. வெறும் உதவித் தொகைகள், ஒதுக்கீடுகள் அல்லது அரசு சாரா நிறுவன மானியங்களை தீர்வுகளாக வழங்கும் தலைமையை நம்பியிருப்பது போதாது. இவை தற்காலிக ஆறுதலை மட்டுமே வழங்கும். நமக்குத் தேவையானது உண்மையான, முறையான மாற்றம். நம் சமூகத்தின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அரசாங்கம், பாராமுகத்துடன் இருப்பதால், நாம் இன்னும் அதிகமாகவும் அழுத்தமாகாவும் குரல்கொடுக்க வேண்டிய நேரம் இது.

நம் குரல்கள் கேட்கப்படும்.. நம் உரிமைகள் மதிக்கப்படும்.., நமது சமூகம் உண்மையிலேயே செழிக்கக்கூடிய எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம் என்று பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No module Published on Offcanvas position